மாவட்ட செய்திகள்

கல்லூரி விழாவில் பங்கேற்க வந்த அமைச்சருக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம்

அதிராம்பட்டினத்தில் நடந்த கல்லூரி விழாவில் பங்கேற்க வந்த அமைச்சருக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதிராம்பட்டினம்,

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். இந்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இஸ்லாமியர்கள் தொடர்ந்து பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தமிழகத்தின் ஆளும் கட்சியான அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

முற்றுகை

இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள காதிர் முகைதீன் கல்லூரியில் நேற்று நடந்த நிறுவனர் தின நூற்றாண்டு விழாவில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, கல்லூரி முன்பு ஏராளமான இஸ்லாமியர்கள் திடீரென திரண்டு கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விழாவில் அமைச்சர் கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

அமைச்சர் வெளியேற வலியுறுத்தல்

மேலும் அமைச்சர் உடனடியாக கல்லூரியை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து அமைச்சர் உடனடியாக கல்லூரியில் இருந்து வெளியேறினார். அதன்பின்னர் இஸ்லாமியர்கள் கல்லூரிக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் கல்லூரி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. கல்லூரி விழாவில் பங்கேற்க வந்த அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு