திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றியம் மோவூர் ஊராட்சிக்கு உட்பட்டது மோவூர் கண்டிகை கிராமம். இங்கு 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சுடுகாட்டு பாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளதால் இங்கு யாரேனும் இறந்தால் அவர்ளின் உடலை எடுத்து செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலைதான் நீடிக்கிறது.
மோவூர் கண்டிகை ஊராட்சி சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சீரமைக்க கோரி பலமுறை அந்த பகுதி மக்கள் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார், கலெக்டர், ஆர்.டி.ஓ. என பலரிடம் பல முறை மனு கொடுத்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பொதுமக்கள் கோரிக்கை
இந்த நிலையில் நேற்று மோவூர்கண்டிகையை சேர்ந்த ஒருவர் இறந்து போனார். அவரது உடலை வயல்வெளி வழியாக மிகுந்த சிரமத்துடன் எடுத்து சென்றனர். சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சீரமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.