மதுரை
மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, பெட்கிராட் இணைந்து குழந்தைகள், பெண்கள் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஹூலுவாடிரமேஷ் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெண்களுக்கு வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பெண்கள் தங்களது வாழ்வில் பாதுகாப்புடன் இருக்க ஒவ்வொரு கட்டத்திலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு கல்வி கட்டாயம் ஆகும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண் பிள்ளைகளுக்கு இணையாக பெண் பிள்ளைகளையும் வளர்க்க வேண்டும். அவர்களை தாழ்வாக நடத்தக்கூடாது.
பெண்கள் தங்களுக்கு உரிய உரிமைகள் என்னென்ன என்பதை கேட்டு தெரிந்து வைத்திருந்தால், இக்கட்டான சூழ்நிலைகளில் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். பெண்கள், பெண் குழந்தைகளால் தான் சமூக முன்னேற்றம் சாத்தியம். பெண்களின் உரிமைகளை பெற்றுத்தருவதற்காக ஒவ்வொரு மாவட்டந்தோறும் சட்டப்பணிகள் ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டு, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு, அவர்களை பாதுகாப்புடன் வளர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.