ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நாட்டை சேர்ந்த பன்னிரண்டு கிராமத்தார்கள் சார்பில் கல்லாலங்குடியில் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஜல்லிக்கட்டு நடத்த தேவையான முன்னேற்பாடு பணிகள் நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதையடுத்து ஜல்லிக்கட்டுக்காக கொண்டுவரப்பட்ட காளைகளை கால்நடை மருத்துவகுழுவினரும், மாடுபிடி வீரர்களை மருத்துவக்குழுவினரும் பரி சோதனை செய்தனர். அதனை தொடர்ந்து மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்முத்தலிபு முன்னிலை வகித்தார். முதலில் முத்துமாரியம்மனுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டு கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்க முன்வரவில்லை.
பின்னர் தஞ்சாவூர், திருச்சி, ஜெயங்கொண்டம், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 823 காளைகள் வாடிவாசல் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. சீறி பாய்ந்து வந்த காளைகளை 300 மாடுபிடி வீரர்கள் அடக்க போட்டி போட்டனர். அப்போது பார்வையாளர்கள் கைதாட்டி ஆராவாரம் செய்தனர்.
சில காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களின் கைகளில் சிக்காமல் தப்பி சென்றன. ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 9 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். 4 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் மோட்டார் சைக்கிள்கள், தங்கம், வெள்ளி காசுகள், பீரோ, சைக்கிள், கட்டில், வெள்ளி பாத்திரங்கள் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை கல்லாலங்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள் கண்டுகளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி, சம்பட்டி விடுதி, வடகாடு, கீரமங்கலம் போலீசார் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை ஆலங்குடி திருக்கோவில்கள் தக்கார் வேலுச்சாமி தொண்டைமான் தலைமையில், 12 கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.