மாவட்ட செய்திகள்

முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு; 26 பேர் காயம்

ஆலங்குடி அருகே முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 26 பேர் காயம் அடைந்தனர்.

ஆலங்குடி,

முத்துமாரியம்மன் கோவில்

ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி கிராமத்தில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது.

இதையொட்டி கோவில் முன்பு வாடிவாசல் அமைக்கப்பட்டு தடுப்பு கட்டைகள் போடப்பட்டிருந்தன. காலையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. அதன்பின்னர் ஆர்.டி.ஓ. அபிநயா ஜல்லிக்கட்டு உறுதிமொழியை வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

சீறிப்பாய்ந்த காளைகள்

இதையடுத்து சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதை யாரும் பிடிக்கவில்லை. இதைதொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை நெருங்க விடாமல் களத்தில் நின்று வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 790 காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தன. இதில் 299 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர். இப்போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், மிக்சி, மின்விசிறி, பாத்திரங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதனை முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற வீரர்கள், பார்வையாளர்கள் என 26 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

ஜல்லிக்கட்டை ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கண்டு களித்தனர். ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு வடிவேல், இன்ஸ்பெக்டர் அழகம்மை ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கிணற்றில் விழுந்த காளை மீட்பு

ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட காளை ஒன்று எதிர்பாராதவிதமாக 100 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் விழுந்த காளையை உயிருடன் மீட்டு அதன் உரிமையாளரான கும்பங்குளத்தை சேர்ந்த அமல்ராஜிடம் ஒப்படைத்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்