மாவட்ட செய்திகள்

திருப்பூர் அருகே அலகுமலை ஜல்லிக்கட்டில் 749 காளைகள் சீறிப் பாய்ந்தன

திருப்பூர் அருகே அலகுமலை ஜல்லிக்கட்டில் 749 காளைகள் சீறிப் பாய்ந்தன. 64 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

திருப்பூர்,

பொங்கலூர் அருகே உள்ள அலகுமலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. 8 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட கேலரி இருபுறமும் அமைக்கப்பட்டிருந்தது. காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஜல்லிக்கட்டு போட்டியை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

749 காளைகள்

பின்னர் வாடி வாசலுக்கு பூஜை செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வந்த காளைகளுக்கு கால்நடை மருத்துவ இணை இயக்குனர் பாரிவேந்தன் தலைமையில் கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து பின்னர் வாடி வாசலுக்கு காளைகளை அனுப்பி வைத்தனர். முதலில் அலகுமலை கோவில் காளை அழைத்து வரப்பட்டது. அதைத்தொடர்ந்து அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான காளை, அதைத்தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.

அலங்காநல்லூர், பாலமேடு, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, தேனி, தஞ்சை, சிவகங்கை, சேலம், அரியலூர், திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல், கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 749 காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்க 555 மாடுபிடி வீரர்கள் காத்திருந்தனர். அவர்கள் சுழற்சி முறையில் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். மாடுபிடி வீரர்களை தனியாக பிரித்து அவர்களுக்கு சீருடைகள் கொடுக்கப்பட்டது.

கதிகலங்கச்செய்தன

சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க வீரர்கள் போட்டி போட்டனர். சில காளைகள் தன்னை அடக்க வந்த வீரர்களை தூக்கி வீசி சென்றது. இருப்பினும் வீரர்கள் சளைக்காமல் காளைகளை மடக்கினார்கள். சில காளைகளின் பெயரை அறிவித்த உடன் வீரர்கள் தடுப்பு கம்பிகளை பிடித்து தாவி மேலே ஏறி தப்பினார்கள். அந்த காளைகள் மைதானத்தில் நின்று விளையாடி வீரர்களை கதிகலங்கச் செய்தன.

ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் வகையில் மைதானத்தில் 4 அகண்ட திரை அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் 23 மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உள்பட மொத்தம் 64 பேர் காயமடைந்தனர். இதில் 18 பேருக்கு படுகாயமும், மற்றவர்களுக்கு லேசானகாயமும் ஏற்பட்டது.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் திருப்பூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பாக்கியலட்சுமி ஆகியோர் தலைமையில் பொங்கலூர் வட்டார மருத்துவ அதிகாரி சுந்தரவேல் உள்பட 30 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

பரிசளிப்பு விழா

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் எவர்சில்வர் பாத்திரங்கள், பணம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர் வழிநடத்தினார். சரவணன் போட்டியை தொகுத்து வழங்கினார். பின்னர் மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. இதில் அதிக காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அதன்படி 12 காளைகளை மடக்கிய திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த கார்த்திக் முதல் பரிசை வென்றார். இவருக்கு அடுத்தபடியாக 6 காளைகளை பிடித்து 3 வீரர்கள் இருந்தனர். அவர்களின் பெயர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து 2-வது, 3-வது மற்றும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. அதன்படி வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த சவுடு 2-வது பரிசையும், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்புதூர் பகுதியை சேர்ந்த ஆதீஷ்வரன் 3-வது பரிசையும், மதுரை மாவட்டம் வௌத்தூரை சேர்ந்த ஜெகதீஷ் ஆறுதல் பரிசையும் வென்றனர். ஜெகதீஷ் கடந்த ஆண்டு அலகுமலையில் நடந்த ஜல்லிக்கட்டில் முதல் பரிசை வென்றவர் ஆவார்.

முதல் பரிசாக மோட்டார் சைக்கிள், 2-வது பரிசாக மொபட், 3-வது பரிசாக 1 பவுன் தங்க சங்கிலி, ஆறுதல் பரிசாக பீரோ ஆகியவை வழங்கப்பட்டது.

இதுபோல் சிறந்த காளையாக திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த விவேக்கின் காளை முதல் இடத்தையும், திருச்சி லால்குடியை சேர்ந்த பெலிக்சின் காளை 2-வது இடத்தையும், ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகரின் காளை 3-வது பரிசையும் வென்றன. முதல் பரிசாக மோட்டார் சைக்கிள், 2-வது பரிசாக மொபட், 3-வது பரிசாக 1 பவுன் தங்க சங்கிலி ஆகியவை வழங்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது