கச்சிராயப்பாளையம்,
கல்வராயன் மலையின் அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. 44 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் பழைய மற்றும் புதிய கால்வாய் மூலம் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கச்சிராயப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 10 ஆயிரத்து 860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு பருவ மழை போதிய அளவு பெய்யாத காரணத்தால் கோமுகி அணை தண்ணீரின்றி வறண்டது. இதனால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில் கோமுகி அணையின் நீர்பிடிப்பு பகுதியான கல்வராயன்மலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெருக்கெடுத்து ஓடும் மழை நீர் கல்படை, பொட்டியம், மாயம்படி ஆறு வழியாக கோமுகி அணைக்கு வருகிறது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கோமுகி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து நேற்று 20 அடியை எட்டியது.
தற்போது அணைக்கு வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கல்வராயன்மலையில் மேலும் மழை நீடிக்கும் பட்சத்தில் அணை தனது முழுகொள்ளளவை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர கல்வராயன்மலையில் பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள முக்கிய நீர்வீழ்ச்சியான பெரியார் மற்றும் கவியம் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. மேலும் படகு குழாமும் நிரம்பி வருவதால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே நேற்று பெய்த மழையால் கல்வராயன்மலை அருகே கொடுந்துறை-மாவடிப்பட்டு இடையே சாலையோரத்தில் இருந்து மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலையில் விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர்.
இது குறித்து கோமுகி அணை பாசன விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் சம்பா மற்றும் குறுவை சாகுபடியை எங்களால் மேற்கொள்ள முடியவில்லை.
இதன் காரணமாக எங்களது தொழில் பாதிக்கப்பட்டது. மேலும் குடிநீர் தட்டுப்பாடும் தலைவிரித்தாடியதால் பொது மக்கள் குடிநீரின்றி கடும் அவதி அடைந்தனர். இந்த நிலையில் கல்வராயன்மலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோமுகி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் மூலம் இந்தாண்டு சம்பா சாகுபடி செய்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளதால் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்றனர்.