புதுச்சேரி,
கர்ம வீரர் காமராஜரின் பிறந்தநாள் விழா புதுவை அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராஜா தியேட்டர் சந்திப்பில் உள்ள அவரது சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், சமூக நல வாரிய தலைவி வைஜெயந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ராமச்சந்திரன், காங்கிரஸ் நிர்வாகிகள் விநாயகமூர்த்தி, பெத்தபெருமாள், தேவதாஸ், ஏ.கே.டி.ஆறுமுகம், வீரமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் கட்சி தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் திருமுருகன், சுகுமாறன், முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பொதுச்செயலாளர் பாலன், கோபி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக கட்சி அலுவலகத்தில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அங்கு காமராஜரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய ரங்கசாமி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.