காஞ்சீபுரம்,
108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற, காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடந்து வருகிறது. அதையொட்டி, இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மே மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து கடந்த மாதம் 29-ந்தேதி கருடசேவை திருவிழா நடைபெற்றது.
நேற்று தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில், உற்சவர் வரதராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். காஞ்சீபுரம் காந்திரோடு தேரடியில் எழுந்தருளிய பெருமாளுக்கு அர்ச்சகர்கள் தீபாராதனைகள் காட்டினர். கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தேரை வடம் பிடித்து இழுத்தார். காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வி.சோமசுந்தரம், மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் ஆகியோர் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். காஞ்சீபுரம் காந்திரோடு தேரடியில் இருந்து புறப்பட்ட இந்த தேர் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் காந்திரோடு, மூங்கில் மண்டபம், காமராஜர் சாலை வழியாக, காஞ்சி சங்கர மடம் அருகே சென்றது. அப்போது காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெருமாளை வணங்கினார்.
விழாவில், அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் தியாக ராஜன், முருகேசன், வெள்ளைச் சாமி, குமரன், செந்தில்குமார், கோவிந்தராஜ், ஆகியோர் கலந்துகொண்டனர். 46-வது பட்டம் அகோபீலமடம் அழகிய சிங்கர் ஜீயர் சுவாமிகள் காஞ்சீபுரம் காந்திரோடு தேரடி அருகே தேரில் எழுந்தருளிய வரதராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியை வணங்கினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரும், கோவில் நிர்வாக அறங்காவலருமான விஜயனும் சிறப்பாக செய்து இருந்தனர். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.