மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி, குளச்சலில் கடலுக்குள் படகில் நின்று மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி, குளச்சலில் கடலுக்குள் படகில் நின்று மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

கன்னியாகுமரி,

இந்திய கப்பல் போக்குவரத்துறை, கரையில் இருந்து 15 கடல் மைல் தொலைவில் புதிய உள்நாட்டு கப்பல் போக்குவரத்து வழித்தடம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதனால், வள்ளம், கட்டுமரம் மற்றும் விசைப்படகுகளில் சென்று கடலில் மீன்பிடிப்போரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், கடல் விபத்துகள் அதிக அளவில் நடைபெறும் என்றும் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே, புதிய கடல் வழிப்பாதையை மீனவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் கடற்கரையில் இருந்து சுமார் 50 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு குறும்பனையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கடலுக்குள் படகில் நின்று மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு கன்னியாகுமரி, சின்னமுட்டம் விசைப்படகு உரிமையாளர் மற்றும் மீனவர் சங்க செயலாளர் ரெஜிஸ் தலைமை தாங்கினார்.

இதில் விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் சிஸ்வஸ்டர், புனித அல்போன்ஸ் விசைப்படகு சங்க தலைவர் ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடலுக்குள் படகில் நின்று கருப்பு கொடி ஏந்தி கோஷமிட்டனர்.

குளச்சலில் மீன்பிடி துறைமுக நடவடிக்கை குழு மற்றும் விசைப்படகு மீன்பிடிப்பவர் நல சங்கம் சார்பில் கடலுக்குள் விசைப்படகில் நின்ற படி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் குமரி கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக்குழு இயக்குனர் ஸ்டீபன், மறை வட்ட முதன்மை அருட்பணியாளர் பிரான்சிஸ் சேல்ஸ், குளச்சல் பங்குத்தந்தை எட்வின், சின்னவிளை பங்குத்தந்தை ஆன்டனி கிளாரட், விசைப்படகு சங்க தலைவர் பிரான்சிஸ், துணைத்தலைவர் அந்திரியாஸ், செயலாளர் பிராங்கிளின், முன்னாள் ஊர் செயலாளர் தர்மராஜ், மீனவர் ஒருங்கிணைப்பு சங்க செயலாளர் ஆன்றோ லெனின் மற்றும் மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதுபோல், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் மற்றும் மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை