காரைக்கால்,
தூத்துக்குடியில் மக்கள் விருப்பத்திற்கு எதிராக நடைபெறும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய தமிழக அரசை கண்டித்து, சென்னையில் போராட்டம் நடத்திய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை, தமிழக போலீசார் கைது செய்தனர். இந்த கைதை கண்டித்து காரைக்காலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் நேற்று முன்னாள் அமைச்சர் நாஜிம் தலைமையில் காரைக்கால் காத்தாபிள்ளைகோடி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்தில், தூத்துக்குடியில் மக்கள் விருப்பத்திற்கு எதிராக நடைபெறும் ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடவேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய தமிழக அரசு பதவி விலக வேண்டும். துப்பாக்கி சூட்டில் இறந்த குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதோடு, குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட 132 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சாலை மறியலால், நாகை-சென்னை இடையே மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.