பெலகாவி,
கர்நாடக மேல்-சபை தலைவர் பதவி கிடைக்காததால், கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள பசவராஜ் ஹொரட்டி பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடக மேல்-சபை தலைவர் பதவிக்கு என்னை தேர்ந்தெடுப்பதாக காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர்கள் உறுதியளித்தனர். மனுத்தாக்கல் செய்யும்படி எனக்கு தேவேகவுடா உத்தரவிட்டார்.
ஆனால் கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சியினர் தங்களின் நிலையை மாற்றிக்கொண்டுள்ளனர். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியினர் எனக்கு அவமானம் இழைத்துவிட்டனர். இது சரியல்ல. காங்கிரஸ் கட்சி, கூட்டணி தர்மத்தை பின்பற்றவில்லை.
சட்டசபையில் காங்கிரசை சேர்ந்தவருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்பட்டுள் ளது. அதனால் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு மேல்-சபை தலைவர் பதவி வழங்குவது தான் நியாயம். இதற்கு காங்கிரஸ் ஒப்புக்கொண்டதாக தேவேகவுடாவே கூறினார்.
நான் யார் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேனோ அவர்களே என்னை ஏமாற்றிவிட்டனர். குமாரசாமியோ அல்லது சித்தராமையாவா என்னிடம் இதுபற்றி விவாதிக்கவில்லை. வட கர்நாடக பகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சியை நேர்மையான முறையில் பணியாற்றி பலப்படுத்தும் பணிகளை செய்துள்ளேன்.
இனிமேல் கட்சி சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் நான் தலையிட மாட்டேன். மந்திரி பதவி வேண்டும் என்றும் கேட்க மாட்டேன். குமாரசாமியை சுதந்திரமாக செயல்பட காங்கிரசார் விடுவது இல்லை.
3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதனால் இப்போது புதுப்புது நிபந்தனைகளை விதிக்கிறார்கள். நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக கூறிவிட்டு, இப்போது, நிபந்தனைகளை விதிப்பது சரியல்ல. இவ்வாறு பசவராஜ் ஹொரட்டி கூறினார்.