தஞ்சாவூர்,
தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. இளைஞரணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாநில இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெள்ளக்கோவில் சாமிநாதன் தலைமை தாங்கினார். தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாநில இளைஞரணி இணை செயலாளர் சுப.சந்திரசேகரன், மாநகர செயலாளர் நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழாவை இளைஞரணி சார்பில் அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடியை ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும், ஆதரவற்ற முதியோர்கள், சிறுவர்களுக்கு உணவு வழங்கியும், பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கியும், மருத்துவ முகாம்கள், பொதுக் கூட்டங்கள் நடத்தியும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
அடுத்தமாதம்(ஜூன்) 1-ந் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவாரூரில் நடக்கிறது. இதில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகின்றனர். இந்த கூட்டத்தில் இளைஞரணியினர் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறோம். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி கலையும் வரை போராட்டம் தொடரும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதை பின்பற்றி இளைஞரணி சார்பில் போராட்டம் நடத்தப்படும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராம நாதன், துணை அமைப் பாளர்கள் செந்தில்குமார், முகிலன், சுரேஷ், அருள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாநில இளைஞரணி செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதன் நிருபர்களிடம் கூறும்போது, தி.மு.க. இளைஞரணியில் நாள்தோறும் ஏராளமானோர் வந்து தங்களை இணைத்து கொள்கின்றனர். இருந்தாலும் இளைஞரணியில் உறுப்பினர் சேர்க்கையை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கி இருக்கிறோம். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது மிக கொடூரமாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளை சுடுவதை போல மக்களை போலீசார் சுட்டுள்ளனர். இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.