திருவாரூர்,
திருவாரூர் அருகே நீலக்குடியில், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகம் அருகே வெட்டாற்றங்கரையில் வனத்துறைக்கு சொந்தமான தேக்கு மரங்கள் உள்ளன.
கடந்த மாதம் கஜா புயல் தாக்கியபோது, வெட்டாற்றங்கரையில் இருந்த பல தேக்கு மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. இந்த மரங்களை பலர் கடத்திச் சென்று விட்டதாக திருவாரூர் வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் வனச்சரக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, வனவர் சுப்பிரமணியன் ஆகியோர் மத்திய பல்கலைக் கழகம் அருகே உள்ள வெட்டாற்றங்கரையை பார்வையிட்டனர்.
அப்போது கஜா புயலின் தாக்கத்தால் சாய்ந்த தேக்கு மரங்கள் கடத்தப்பட்டு இருப்பதும், அவற்றில் சில மரங்கள் மத்திய பல்கலைக்கழக வளாகத்துக்குள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த தேக்கு மரங்களை வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பன்னீர்செல்வம், பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் காவலாளிகள் சிவராமன், முருகேசன் ஆகியோரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பதுக்கி வைக்கப்பட்ட தேக்கு மரங்களின் மதிப்பு ரூ.40 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பல்கலைக்கழக ஊழியர்கள் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மத்திய பல்கலைக்கழக பதிவாளர் புவனேஸ்வரி கூறியதாவது:-
இதுகுறித்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பதிவாளர் புவனேஸ்வரி கூறியதாவது:-
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் தேக்கு மரங்களை பதுக்கியது தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை குழு இன்று (வியாழக்கிழமை) விசாரணை நடத்துவார்கள். இதில் யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.