தாம்பரம்,
சென்னையை அடுத்த குரோம்பேட்டை, ஐஸ்வர்யா நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 43). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் 19-ந் தேதி இவரது வீட்டுக்குள் புகுந்த ஜெயராமன் (28) மற்றும் சிலர் பிரபல ரவுடி சீசிங் ராஜா (46) அழைத்து வர சொன்னதாக கூறி கத்திமுனையில் மிரட்டி, சரவணனின் கண்ணை கட்டி காரில் கடத்திச் சென்றனர்.
சரவணனை மிரட்டிய சீசிங் ராஜா, ரூ.10 லட்சத்தை பறித்துக்கொண்டு, இதுபற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி, மீண்டும் கண்ணைக்கட்டி ஸ்ரீபெரும்புதூர் அருகே அவரை இறக்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சரவணன் அளித்த புகாரின்பேரில் சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உதவி கமிஷனர் சகாதேவன் தலைமையில் தனிப்படை அமைத்து சீசிங் ராஜா மற்றும் ஜெயராமன் ஆகியோரை தேடி வந்தனர்.
சரவணனை கடத்திய காரின் பதிவு எண்ணை வைத்து சிட்லபாக்கம் போலீசார் தாம்பரம் சானடோரியம் அருகே ஜெயராமனை கைது செய்தனர். பின்னர் அவர் அளித்த தகவலின்பேரில் முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி சீசிங் ராஜாவை கைது செய்தனர்.
கைதான 2 பேரிடம் இருந்தும் துப்பாக்கி, 7 பட்டா கத்திகள், 3 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.