நெல்லை,
நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜநகர் டி.வி.எஸ். நகரை சேர்ந்தவர் ஞானபிரகாசம் (வயது 82). தனியார் நிறுவனத்தில் இரவு நேர காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அந்தோணியம்மாள் (79). இவர்களுடைய மகன்களுக்கு திருமணமாகி வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர். இதனால் வீட்டில் ஞானபிரகாசம், அந்தோணியம்மாள் மட்டும் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி இரவு ஞானபிரகாசம் வேலைக்கு சென்று விட்டார். அப்போது அந்தோணியம்மாள் வீட்டில் தனியாக இருந்தார். மறுநாள் காலையில் பார்த்த போது, அந்தோணியம்மாள் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்தோணியம்மாள் உடலை மீட்டு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்தோணியம்மாளை அவருடைய பேரன் ஞானராஜ் (19) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். ஞானராஜ் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறிஇருப்பதாவது.
நான் எனது பாட்டி அந்தோணியம்மாளை அவ்வப்போது சந்தித்து பேசுவேன். சம்பவத்தன்று பாட்டியிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது அவர் சித்தப்பா சார்லஸ் மறைவுக்கு உனது சித்திதான் காரணம் என்று என்னிடம் கூறினார். மேலும் எனது அம்மாவை பற்றியும் தவறாக பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்து பாட்டியை பிடித்து கீழே தள்ளினேன். அவரது தலை சுவற்றில் மோதி ரத்தகாயம் ஏற்பட்டது. அவர் கீழே விழுந்து மயங்கி கிடந்தார். நான் அவரது சேலையால் கழுத்தை நெறித்து கொலை செய்தேன். இயற்கையாகவே கீழே விழுந்து மரணம் அடைந்து போல் போட்டு விட்டு அங்கு இருந்து ஓடிவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து போலீசார் ஞானராஜை நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.