மாவட்ட செய்திகள்

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி செல்கிறது

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

மண்டியா,

கர்நாடகம் மற்றும் தமிழக மக்கள், விவசாயிகளின் வாழ்வாதாரமாக காவிரி ஆறு விளங்குகிறது. இதனால் காவிரி தண்ணீரை பங்கீட்டு கொள்வதில் இரு மாநிலங்கள் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம், ஜூலை மாதம் தமிழகத்திற்கு காவிரியில் 34 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி ஆகும்) தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் கர்நாடக அரசு, மாநிலத்தில் போதிய மழை இல்லாததால் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி ஆகிய அணைகளில் குடிநீருக்கு மட்டும் தான் தண்ணீர் உள்ளது என்றும், இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க இயலாது என்றும் கூறி வந்தது. மேலும் கர்நாடக விவசாயிகளும் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய பின்னரும் மழை பெய்யாமல் இருந்ததால் மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ்., மைசூருவில் உள்ள கபினி ஆகிய அணைகளுக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்தது. இதன்காரணமாக அணையின் நீர்மட்டமும் கணிசமாக குறைந்தது. இதனால் அந்தப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது. இந்த நிலையில், கபினி அணையின் நீர்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாட்டிலும், கே.ஆர்.எஸ். அணையின் நீர்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த அணைகளுக்கு இன்னும் சில தினங்களில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரள மாநிலத்தில் சில பகுதிகள் மற்றும் குடகு மாவட்டத்தில் நேற்று முதல் 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 4 நாட்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த 4 நாட்களில் ஒவ்வொரு நாளும் 20 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்னும் சில தினங்களில் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு அதிகமான நீர்வரத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி நேற்று முன்தினம் மாலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தமிழகத்தை நோக்கி செல்கிறது. இந்த நிலையில் நேற்று காலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது நேற்று மாலை 6 மணி நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 7,713 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில், வினாடிக்கு 2,611 கனஅடி தண்ணீர் கால்வாய்கள் மூலம் மாநில விவசாயிகளின் பாசனத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 5,102 கனஅடி தண்ணீர் செல்கிறது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 89.50 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 573 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 7,713 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2018) இதே தினத்தில் கே.ஆர்.எஸ். அணை முழுகொள்ளளவையும் எட்டி நிரம்பியிருந்தது.

இதேபோல, நேற்று காலை முதல் கபினி அணையில் இருந்தும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 8,102 கனஅடி வீதம் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் காவிரி ஆற்றில் இருபுற கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் தமிழகத்திற்கு சீறிப்பாய்ந்து செல்கிறது.

கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில், நேற்று காலை நிலவரப்படி 2,2670 அடி கொள்ளளவு தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5,048 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து மத்தூரில் பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, மைசூருவிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஸ்ரீரங்கப்பட்டணா பறவைகள் சரணாலயத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்