பெங்களூரு,
முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க குமாரசாமி அனுமதி கேட்டு இருந்தார். பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து பேச குமாரசாமிக்கு அனுமதி கிடைத்தது. இதையடுத்து, முதல்-மந்திரியாக பதவி ஏற்ற குமாரசாமி முதன்முறையாக நேற்று டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது கர்நாடக வளர்ச்சிக்கு மத்திய அரசு மாநில அரசுக்கு உதவ வேண்டும். கர்நாடக வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடியிடம், குமாரசாமி முன்வைத்துள்ளார். இதனை கேட்டுக்கொண்ட நரேந்திர மோடி, கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உதவி செய்வதாக கூறியுள்ளதாக தெரிகிறது. இந்த சந்திப்புக்கு பின்னர் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.
நான் சாதாரண மக்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறேன். முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றவுடன் கர்நாடகத்தில் உள்ள விவசாயிகளின் விவசாய கடன்களை 24 மணி நேரத்தில் ரத்து செய்வதாக நான் அறிவித்தேன். இது உண்மை தான். எனது வாக்குறுதியில் நான் உறுதியாக இருக்கிறேன். கர்நாடகத்தில் தற்போது கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. எனக்கும் வரம்புகள் உள்ளன. விவசாய கடனை தள்ளுபடி செய்வதற்கு காங்கிரஸ் கட்சியின் ஒத்துழைப்பு தேவையாக உள்ளது. இந்த விஷயத்தில் எனக்கு கொஞ்சம் காலஅவகாசம் கொடுக்க வேண்டும். பொதுமக்கள் யாரும் அரசியலால் பாதிக்கப்பட கூடாது.
விவசாய கடனை ரத்து செய்யாவிட்டால் நான் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடுகிறேன். விவசாய கடனை ரத்து செய்யும் விவகாரத்தில் நான் அமைதியாக இல்லை. எடியூரப்பாவை போன்று அமைதியாகவும் இருக்க மாட்டேன். விவசாய கடனை ரத்து செய்யும் வழிமுறைகள் தயாராக உள்ளன. இதுபற்றி புதன்கிழமை(அதாவது நாளை) பெங்களூருவில் வைத்து பொதுமக்களிடம் தெரிவிக்க உள்ளேன். இந்த விவகாரத்தில் பா.ஜனதாவினரின் பேச்சுக்களை கண்டு யாரும் குழப்பம் அடைய வேண்டாம்.
பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். கர்நாடகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தேன். கர்நாடக வளர்ச்சிக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். கர்நாடகத்தில் ராய்ச்சூர், எராமரஸ் மற்றும் பல்லாரியில் உள்ள 3 அனல் மின் நிலையங்களில் பயன்படுத்த 15 நாட்களுக்கு மட்டும் நிலக்கரி உள்ளது. எனவே, தேவையான நிலக்கரியை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.
பிரதமராக செயல்பட்டு வருவது மற்றும் முதல்-மந்திரியாக செயல்பட்டது ஆகியவற்றின் மூலம் அரசியல் ரீதியாக நரேந்திர மோடி பெற்ற அனுபவங்களை, அறிவுரைகளாக எனக்கு வழங்கினார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, முதல்-மந்திரி குமாரசாமி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.