திருவனந்தபுரம்,
குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மோகன அய்யர். கடந்த 3-ந் தேதி கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. மாலை 6 மணிக்கு மேல் பஸ்கள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில் களியக்காவிளையில் கூட்டமாக வந்த ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் பஸ்களை இயக்க விடாமல் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் மறியல் நடத்தக்கூடாது என்று சமாதானம் பேசினார்.
ஆனால் தொண்டர்கள் கண்டு கொள்ளாமல் பஸ் மறியலில் ஈடுபட தொடங்கினர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மோகன அய்யர், சினிமா பாணியில் தனி ஆளாக நின்று தொண்டர்களை விரட்டியடித்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினார்.
இவரின் மிரட்டலுக்கு பயந்து ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்கள் பஸ் மறியலை தவிர்த்து விலகி சென்றனர். தொடர்ந்து தமிழ்நாடு-கேரளா இடையே போக்குவரத்து சீராக நடைபெற்றது.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டருக்கு பல்வேறு இடங்களில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. அவரின் இந்த செயலை பாராட்டிய கேரள அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் டோமின் தச்சங்கரி, அவருக்கு ரூ.1,000 பரிசு அறிவித்து உள்ளார்.