விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள கோலியனூரில் பிரசித்தி பெற்ற புத்துவாயம்மன் கோவில் உள்ளது. கோவில் திருப்பணிகள் நடந்து, கும்பாபிஷேக விழா கடந்த 13-ந் தேதி தொடங்கி, மாலையில் முதல்கால யாக சாலை பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் காலையில் 2-ம் கால பூஜையும், மாலையில் 3-ம் கால பூஜை, மகா தீபாராதனையும் நடந்தது.
இதனை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகத்தையொட்டி அதிகாலை 4.45 மணி முதல் 4-ம் கால யாக பூஜை, பூர்ணாகுதி, நடந்தது. அதன் பிறகு 8 மணிக்கு கடம் புறப்பாடாகி 8.15 மணியளவில் கோவிலின் ராஜகோபுரம், விமானம் மற்றும் பரிவாரங்களுக்கும், 8.30 மணியளவில் புத்துவாயம்மன், ரேணுகாதேவி மற்றும் மூலாலய பரிவாரங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சா மி தரிசனம் செய்தனர்.
தேர் வெள்ளோட்டம்
கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததும் காலை 9 மணியளவில் கோவிலின் திருத்தேருக்கு கும்பாபிஷேகம், மகா தீபாராதனை செய்யப்பட்டு திருத்தேர் வெள்ளோட்டம் நடந்தது.
பின்னர் காலை 10 மணிக்கு புத்துவாயம்மன், ரேணுகாதேவிக்கு மகா அபிஷேகம், தீபாராதனையும், இரவு 7 மணியளவில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தாசில்தார் ஆனந்தகுமார், ஒன்றியக்குழு தலைவர்கள் கோலியனூர் சச்சிதானந்தம், கண்டமங்கலம் வாசன், மாவட்ட கவுன்சிலர் தமிழ்செல்வி கேசவன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி தெய்வசிகாமணி, ஊராட்சி மன்ற தலைவர் கண்மணி கண்ணியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (பொறுப்பு) கஜேந்திரன், உதவி ஆணையர் ஜோதி, ஆய்வாளர் செல்வராஜ், செயல் அலுவலர் சூரியநாராயணன், விழாக்குழுவினர் தெய்வசிகாமணி, சிவஞானம், சின்னத்துரை, சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள், உற்சவத்தினர், உபயதாரர்கள், கோலியனூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.