அமைச்சர் டி.ஜெயக்குமார் குடிசைப்பகுதி மக்களுக்கு இலவச மதிய உணவை வழங்கி தொடங்கி வைத்தபோது எடுத்த படம் 
மாவட்ட செய்திகள்

பெருநகர சென்னை மாநகராட்சியில் 26 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 26 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் நேற்று தொடங்கியது.

8 நாட்களுக்கு இலவச உணவு

சென்னையில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட 5.3 லட்சம் குடிசை வாழ் குடும்பங்களில் உள்ள, 26 லட்சம் பேருக்கு, 6-ந்தேதி (நேற்று) முதல் வருகிற 13-ந்தேதி வரை 8 நாட்கள் இலவசமாக உணவு வழங்கவேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

இதையடுத்து பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று முன்தினம், குடிசைப்பகுதியில் வசிக்கும் 26 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்படும் என அறிவித்தார்.

சமையல் கூடங்கள்

கமிஷனரின் அறிவிப்பை தொடர்ந்து சென்னையில் தரமான, ஆரோக்கியமான உணவுகள் 3 வேளையும் இலவசமாக வழங்க அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக செய்யப்பட்டது. உணவு சமைப்பதற்காக, அந்தந்த மண்டலங்களில் உள்ள சமுதாய நல கூடங்கள், பெரிய சமையல் கூடம், அம்மா உணவகங்கள் பயன்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு சமையல் கூடங்களிலும் 20-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் மூலம் பல்வேறு வகையான உணவுகள் சமைக்கப்படுகிறது. மாலை நேரத்தில் டீ, காபியும் வழங்கப்படுகிறது.

செனாய் நகரில்...

சென்னை அண்ணாநகர் மண்டலம், செனாய் நகரில் உள்ள அண்ணா சமூக நலக்கூடத்தில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்பண்பாட்டுத்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். அப்போது பொதுமக்களுக்கு இட்லி, கிச்சடி, பொங்கல் வழங்கப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் மற்றும் தியாகராயநகர் எம்.எல்.ஏ. சத்தியநாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் காலை உணவை அப்பகுதி பொதுமக்களுடன் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டனர்.

மகிழ்ச்சி அளிக்கிறது

இதேபோல் விலையில்லா மதிய உணவை, அடையாறு மண்டலம் ஆதம்பாக்கத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் நகரில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் குடிசைப்பகுதி மக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். சாம்பார் சாதம், புளியோதரை, பிரியாணி ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதுகுறித்து குடிசைப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

மழைவெள்ளத்தால் எங்கள் குடிசைப்பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதித்தது. முதல்-அமைச்சர் உத்தரவிட்டதின் பேரில், தினமும் 3 வேளையும் இலவச உணவு வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. உணவு தரமாகவும், சுவையாகவும் இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்