புதுச்சேரி,
புதுச்சேரி அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிய கடன் மற்றும் அதற்கான வட்டியை தள்ளுபடி செய்யக்கோரி அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையில் கடனுக்கான வட்டி பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.
இதற்கு மாற்றுத்திறனாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடந்த 11-ந் தேதி சமூக நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கந்தசாமியை முற்றுகையிட்டு, கடனுக்கான வட்டியை உதவித்தொகையில் பிடித்தம் செய்யக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.
அவரும் துறை அதிகாரிகளை அழைத்து உதவித்தொகையில் வட்டியை பிடித்தம் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தினார். அதன்பிறகும் உதவித்தொகையில் வட்டிக்கான தொகை பிடித்தம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று காலை பாரதி பூங்காவில் நடந்தது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் ராஜி, முத்துக்குமரன், கந்தசாமி, மாறன், அந்தோணி முத்து, சுப்புராயன், சுசீலா உள்பட 15 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்படும் உதவித்தொகையில், கடனுக்கான வட்டியை பிடித்தம் செய்யக்கூடாது. கடன் மற்றும் வட்டியை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) இந்திராகாந்தி சிலை அருகில் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.