திருவாரூர்:-
கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு எதிரொலியாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கொரோனா பரவல் அதிகரிப்பு
2019-ம் ஆண்டு இறுதியில் தொடங்கி இன்று வரை உலகத்தை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது கொரோனா எனும் கொடிய நோய். கொரோனா பரவலுக்கு பிறகு மக்களின் இயல்பான வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. விழாக்கள், பொது நிகழ்ச்சிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடனேயே நடைபெற்று வருகின்றன.
சமீப காலமாக கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதன் வேகம் அதிகரித்து உள்ளது. அத்துடன் கொரோனாவின் புதிய வகயைன ஒமைக்ரானின் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு
கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து இருப்பதன் எதிரொலியாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தது. மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வழிபாட்டு தலங்கள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 6-ந் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்றாலும் மருந்து கடைகள், பால் கடைகள், பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்கள், சரக்கு வாகன போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் அமல்
அரசு அறிவிப்பின்படி நேற்று திருவாரூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக திருவாரூர் கடைவீதியில் மளிகை, காய்கறி கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. திருவாரூர் நகரில் பரபரப்பாக காணப்படும் கடைவீதி, பழைய பஸ் நிலையம், பனகல் சாலை உள்ளிட்ட பகுதிகள் நேற்று வெறிச்சேடி காணப்பட்டன. உள்பட அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த திருவாரூர் பகுதியில் பல்வேறு இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். முழு ஊரடங்கினை மீறி வீட்டை விட்டு வெளியில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.