விக்கிரவாண்டி,
சேலம் அருகே உள்ள பொன்னம்மா பேட்டை தில்லை நகரைச்சேர்ந்த பெரியசாமி என்பவருடைய மகன் கவுதம்(வயது21). இவர் பி.இ. படித்துள்ளார். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கம்பெனியில் ஒரு ஆண்டு பயிற்சி முடித்து விட்டு சொந்த ஊருக்கு சென்று இருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியில் சேருவதற்காக அவர் நேற்று சேலத்தில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். விக்கிரவாண்டியை அடுத்த காட்டன் மில் அருகே அவர் செல்லும் போது, அந்த வழியே பின்னால் வந்த கண்டெய்னர் லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அவர் மீது கண்டெய்னர் லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கியது. இதில் கவுதம் உடல் நசுங்கி பரிதாபமாக செத்தார். இது பற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கவுதமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.