ஆலந்தூர்,
சென்னை கிண்டியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர், கிண்டி போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர், தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன், அவருடைய மனைவி காஞ்சனா ஆகியோர் போலி ஆவணங்கள் மூலமாக சிட்கோவுக்கு சொந்தமான 2 தொழிலாளர் குடியிருப்பை ஆக்கிரமித்து கொண்டதாக கூறி இருந்தார்.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி இருவரும் சைதாப்பேட்டை பெருநகர 11-வது கோர்ட்டில் ஆஜராகி குற்றப்பத்திரிக்கை நகலை பெற்றனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு மீண்டும் சைதாப்பேட்டை பெருநகர 11-வது கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மா.சுப்பிரமணியன், அவருடைய மனைவி ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது இந்த வழக்கை எம்.எல்.ஏ., எம்.பி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம் செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். மேலும் சிறப்பு கோர்ட்டில் வருகிற மார்ச் மாதம் 20-ந் தேதி இருவரும் ஆஜராகும்படியும் அவர் உத்தரவிட்டார்.