நெல்லை,
புரட்டாசி மாதத்தில் வருகிற மகாளய அமாவாசை தினத்தில் இந்துக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம் ஆகும். அதன்படி மகாளய அமாவாசை தினமான நேற்று பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு நீர்நிலைகளின் அருகில் தர்ப்பணம் கொடுக்க இருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், தாமிரபரணி ஆற்றில் நீராடுவதற்கும், ஆற்றங்கரையில் தர்ப்பணம் கொடுப்பதற்கும் தடை விதித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டார். இதனால் நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதி வெறிச்சோடியது. குறுக்குத்துறை முருகன் கோவில், இசக்கி அம்மன் கோவில் படித்துறைகள், வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறை ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர்.
நெல்லை மாநகர பகுதி முழுவதும் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரை படித்துறை பகுதிகளில் வரிசையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள், தாமிரபரணி ஆற்றுக்கு யாரும் சென்று நீராடவும், தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதி அளிக்கவில்லை. அங்கு வந்த பொதுமக்களை திருப்பி அனுப்பினார்கள். இதனால் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இதையடுத்து பெரும்பாலானவர்கள் தங்களது வீடுகளிலேயே முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தினர். முன்னோர்கள் விரும்பி சாப்பிட்ட பொருட்களை படையலாக படைத்து வழிபட்டனர். சிலர், டவுன் உள்ளிட்ட பகுதிகளில் மரத்தடியில் மற்றும் புரோகிதர்களின் வீடு பகுதியில் சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டு சென்றனர். சில இடங்களில் பக்தர்கள் கோவிலுக்கு செல்லவும் போலீசார் தடை விதித்தனர்.
நெல்லை அருகே உள்ள அருகன்குளம் கோசாலை ஜடாயுத்துறை படித்துறையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் நேற்று அதிகாலை பொதுமக்கள் குளித்துவிட்டு தாங்களாகவே ஆற்றில் எள் தூவி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள விநாயகர் கோவிலிலும், ஜடாயு தீர்த்தம் லட்சுமிநாராயணர் கோவிலிலும் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். இதை அறிந்த போலீசார் ஆற்றில் குளிக்க சென்றவர்களை அங்கிருந்து விரட்டினர். இதனால் பலர் குளிக்காமல் திரும்பி சென்றனர். சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றிலும் பொதுமக்களை குளிக்க போலீசார் அனுமதிக்கவில்லை. ஏராளமானவர்கள் அதிகாலையில் தங்களது வீட்டு வாசலில் நின்று சூரியனை வழிபட்டுவிட்டு தாங்களாகவே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
பாபநாசம் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பக்தர்கள் வந்தனர். ஆனால் போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள், கோவில் மண்டபத்தில் அமர்ந்து இருந்தனர். பின்னர் அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
சிவந்திபுரம் கஸ்பா கல்யாணிதுறை பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சிலர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதனை அறிந்த வருவாய் துறையினர் அங்கு சென்று, அவர்களுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இதேபோன்று விக்கிரமசிங்கபுரம் அருகே வேம்பையாபுரம் கோரைகுளம் பகுதி வழியாக செல்லும் தெற்கு கோடை மேலழகியான் கால்வாயிலும் சிலர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இதேபோல் குற்றாலம் அருவிகளில் குளிக்கவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக குற்றாலம் அருவிக்கரை பகுதிகளில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு இருந்தது. அருவிகளுக்கு யாரும் செல்லாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.