காரியாபட்டி,
தொடர்மழையினால் மக்காச்சோள பயிர்கள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தொடர்மழை
நரிக்குடி அருகே இசலி கிராமத்தில் 30 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். ஒரு ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிட ரூ. 30 ஆயிரம் வரை செலவாகிறது.
மக்காச்சோளத்தில் படைப்புழு நோய் அதிகமாக தாக்குவதால் அடிக்கடி விவசாயிகள் மருந்து தெளித்து பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழையின் காரணமாக இந்த பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் இசலி கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் முழுவதும் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
நிவாரணம்
இதுகுறித்து இசலி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில் கூறியதாவது:-
எங்களது கிராமத்தில் எண்ணற்ற விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது பெய்த மழையினால் மக்காச்சோளம் முழுவதும் ஒடிந்து கீழே சாய்ந்து மகசூல் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
மக்காச்சோள பயிர் பாதிப்பினால் விவசாயம் செய்வதற்கு வாங்கிய கடனை கூட அடைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.