தேர்தல் பிரசாரம்
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரும் மயிலாடுதுறை மாவட்ட செயலாளருமான பவுன்ராஜ் எம்.எல்.ஏ. போட்டியிடுகிறார். அவர் செம்பனார் கோவில் ஒன்றிய பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று தேர்தல் பிரசாரம் செய்தார். செம்பனார் கோவில் அருகே அன்னவாசல் பகுதியில் பிரசாரம் செய்ய சென்ற அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
புதிய திட்டங்கள்
அப்போது அவர் கூறுகையில், அ.தி.மு.க அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மீனவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் எண்ணற்ற சலுகைகளை வழங்கியும், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அரசு துறை சிறப்பாக செயல்பட்டு சிறந்த மாநிலமாக, மத்திய அரசு தேர்ந்தெடுத்து பல்வேறு துறைகளுக்கு விருது வழங்கி உள்ளது. இது அரசுக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கும் பெருமை வாய்ந்ததாகும். அதை போல நானும் பூம்புகார் சட்டமன்ற தொகுதி வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டு 80 சதவீதம் வளர்ச்சி பணியை செய்து உள்ளேன். மீண்டும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் புதிய திட்டங்கள் கொண்டு வர, எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.
அப்போது அவருடன் அ.தி.மு.க கூட்டணி கட்சியினர், வேட்பாளருடன் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் சுந்தரராஜன் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜனார்த்தனம் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.