நவீன விஞ்ஞான வளர்ச்சியானது மனிதர்களுக்கு இறக்கை ஒன்றை மட்டும்தான் இயற்கையாக வளரச் செய்யவில்லையே தவிர கற்பனைக்கு எட்டாத எண்ணற்ற வசதிகளை உருவாக்கி வருகிறது.
உதாரணமாக, சில வகையான புற்றுநோய்கள் உள்ளிட்ட பல உயிர்கொல்லி நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் தொடங்கி இதயம், நுரையீரல் உள்ளிட்ட உயிர்காக்கும் பாகங்கள் பழுதுபட்டால் அவற்றுக்கான மாற்றுப் பாகங்களை ஸ்டெம் செல்களில் இருந்து உற்பத்தி செய்வது வரை பல மருத்துவ முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
அந்த வரிசையில், மனிதனின் ஆயுட்காலத்தை சுமார் 500 ஆண்டுகள் வரை நீட்டிப்பது முதல் உச்சகட்டமாய் மனிதனுக்கு சாகாவரத்தைக் கொடுப்பது வரை பல மருத்துவ ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக, இது தொடர்பான சமீபத்திய ஆய்வு ஒன்று, மனிதனுடைய ஆயுட்காலம் மற்றும் உடல் ரீதியிலான திறன்களுக்கு மரபியல் அல்லது மரபணு மற்றும் உயிரியல் சார்ந்த ஒரு இயற்கையான வரம்பு இருக்கிறது என்று கண்டறிந்துள்ளது.
அதாவது, ஒரு மனிதன் எத்தனை வயது வரை வாழ்வான், எவ்வளவு உயரமாக வளர்வான் மற்றும் எந்தவிதமான உடல் தகுதிகளைக் கொண்டிருப்பான் என்பதற்கு ஒரு இயற்கையான எல்லை உண்டு என்று கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் 120 ஆண்டுகால வரலாற்றுத் தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ள இந்த முக்கியமான ஆய்வின் முடிவுகள் அதிக எண்ணிக்கையிலான மனிதர்கள் அதிகபட்ச வயது வரை வாழ்வார்கள் என்றாலும், அதிகபட்ச வயது வரம்பு என்பது ஒரு குறிப்பிட்ட அளவைத்தாண்டாது என்று கூறுகின்றன.
உதாரணமாக, சமீபத்தில் வெளியான நெதர்லாந்து நாட்டு ஆய்வு ஒன்று, அதிகபட்ச மனித ஆயுள் 115 வயதைத் தாண்டாது என்று கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக, அளவில் பெரிய மூளை, அதிகபட்ச உயரம், ஆயுட்காலம் மற்றும் உடல்தகுதி ஆகிய நவீனகால மனித திறன்களுக்கு பல மில்லியன் ஆண்டுகால பரிணாமக்காரணிகள் தான் அடிப்படை என்கிறது பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் டெஸ்கார்டெஸ் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு.
மேலும், மனித வாழ்க்கை காரணமாக சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகளுடன் இணையும்போது அதிகபட்ச மனித வயது மற்றும் திறன்கள் ஆகியவை குறையக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள் ஷான் பிரான்காய்ஸ் டூசெயின்ட் மற்றும் ஏட்ரியன் மார்க் ஆகியோர்.
இது ஒருபுறமிருக்க, மனிதர்கள் 200 முதல் 500 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான வயது வரை வாழ்வார்கள் எனும் கருத்தை முன்வைக்கும் ஆய்வுகள் வெறும் கணிதக் கணிப்புகளை அடிப்படையாகக்கொண்டும், ஆனால் அதேசமயம் மனித மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டுக்கும் இடையிலான தொடர்புகள் மற்றும் இடைவினைகளைக் கருத்தில் கொள்ளாமலும் மேற்கொள்ளப்படுகின்றன என்கிறார்கள் டூசெயிண்டும், மார்க்கும்.
ஆனால், கிறிஸ்பர் உள்ளிட்ட நவீன மரபணுத் திருத்த தொழில்நுட்ப அடிப்படையில் மனித மூப்படைதலை ஏற்படுத்தும் மரபணுக்களை நீக்கும் அல்லது குணப்படுத்தும் சில மருத்துவ முயற்சிகள் நல்ல பலனை அளித்திருப்பது உண்மைதான். என்றாலும், அத்தகைய தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தும் பின்விளைவுகள் மற்றும் ஆபத்துகள் குறித்த தெளிவான புரிதல் இன்னும் ஏற்படவில்லை என்பதே எதார்த்தம்.
எவ்வளவு நவீனமான தொழில்நுட்பம் வந்தாலும், அதீத உயரம், ஆயுட்காலம் மற்றும் உடல்தகுதிகள் கொண்ட மனிதன் 3.0 அல்லது 4.0 (Homo sapiens 3.0 or 4.0) உள்ளிட்ட நவீன மனித இனங்கள் தோன்றினாலும் கூட அவற்றின் திறன்களும் ஒரு கட்டத்தில் சமநிலை அடைந்தே தீரும் என்கிறார்கள் டூசெயிண்டும், மார்க்கும். உதாரணமாக, மரங்கள் எவ்வளவு உயரமாக வளர்ந்தபோதும் விண்ணைத் தொடுவதில்லையே என்கிறார்கள்.