திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே உள்ளது கண்டரமாணிக்கம். இந்த ஊரில் பிரசித்திபெற்ற மாணிக்கநாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் பால்குட விழா நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இந்தநிலையில் திருவிழாவையொட்டி நேற்று கண்டரமாணிக்கத்தில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முன்னதாக மஞ்சுவிரட்டு நடத்துவதற்காக அந்த கிராமத்தில் தொழுவம் அமைக்கப்பட்டிருந்தது.
மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியையொட்டி நேற்று காலை கோவில் காளைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டன. அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து காளைகளுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் மஞ்சுவிரட்டு தொழுவத்திற்கு வந்த கோவில் காளைகள் முதலில் அவிழ்த்துவிடப்பட்டன. இதனைத்தொடர்ந்து மஞ்சுவிரட்டு காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு நிகழ்ச்சி தொடங்கியது. தொழுவத்தில் மொத்தம் 60 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அப்போது களத்தில் அனுமதிக்கப்பட்ட 46 மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்த காளைகளை ஆர்வத்துடன் அடக்கினர்.
இதேபோன்று கண்டரமாணிக்கம் கண்மாய் மற்றும் வயல்வெளிகளில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட 300-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. அப்போது சீறிப்பாய்ந்த காளைகளுடன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் அடக்கினர். இதில் பல காளைகள் பிடிபடவில்லை. சில காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். இறுதியில் மஞ்சுவிரட்டில் வெற்றிபெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த மஞ்சுவிரட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 31 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் கண்டனூரை சேர்ந்த ஆண்டியப்பன்(வயது 20), வ.சூரக்குடி செந்தில்(26), கொட்டப்பட்டி ராஜா(36) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். முன்னதாக மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் எஸ்.வி.மங்கலத்தை சேர்ந்த தனியார் பஸ் டிரைவரான சேவற்கொடியான்(40) மற்றும் மதுரை மாவட்டம் மேலூர் அருகே பனையேந்தல்பட்டியை சேர்ந்த பெரியசாமி(36) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார்கள்.