மன்னார்குடி,
மன்னார்குடி ஒன்றியக்குழு கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வனிதாஅருள்ராஜன், ஒன்றிய ஆணையர் உஷாராணி, வட்டாரவளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உறுப்பினர்கள் பேசியதாவது:-
கொள்முதல் நிலையங்கள்
பாரதிமோகன் (தி.மு.க):- மன்னார்குடி மேற்கு ஒன்றிய பகுதியில் மகாதேவபட்டினம் உள்ளிட்ட ஓரிரு இடங்களில் மட்டுமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. ஆனால் இங்கு ஒரு நாளுக்கு 300 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் நெல்மூட்டைகளுடன் காத்து கிடக்கின்றனர். எனவே கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டும்.
கடந்த ஒரு ஆண்டாக ஊராட்சிகளுக்கு நிதி வழங்காததால் கிராமங்களில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
குமரேசன் (தி.மு.க):- உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த 3 ஆண்டுகள் ஊராட்சிகளுக்கு மத்திய அரசின் நிதி வராமல் இருந்தது. இப்போது அந்த நிதியை மத்திய அரசிடம் இருந்த கேட்டு பெற நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அருள்மொழி(தி.மு.க):- கஜா புயலின் போது புதிதாக போடப்பட்ட மின்கம்பங்கள் ஆங்காங்கே சரிந்து மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனை கடந்த கூட்டங்களில் எடுத்துசொன்னபோதும் இதுவரை சரிசெய்யவில்லை. உடனடியாக சீர்வேண்டும்.
பூபதி (இ.கம்யூ):- ஓவர்சேரியில் ரேசன்கடைஅமைத்துதர வேண்டும். பழுதான பழையனூர் சாலை, சிவன்கோவில் சாலை, அய்யம்பேட்டை சாலை ஆகிய சாலைகளை சீரமைத்து தரவேண்டும்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்
கோவில்வினோத் (அ.தி.மு.க):- பரவாக்கோட்டை-உள்ளிக்கோட்டை இணைப்பு சாலை மிக மோசமாக உள்ளது.இதனை செப்பனிட்டு தரவேண்டும்.
செந்தாமரை செல்வி(தி.முக):- ஆலங்கோட்டை, சுந்தரக்கோட்டையில் வடிகால் வாய்க்கால்களை சீர்செய்து தரவேண்டும். கீழநத்தம் பகுதியில் உள்ள பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடத்தை அகற்றவேண்டும்.
கே.என்.செல்வம் (பா.ஜ.க):- பரவாக்கோட்டை- திருமேணி இணைப்பு சாலையை செப்பனிட்டு தரவேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
பின்னர் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் பேசுகையில், தற்போது கொரோனா கால நிதி நெருக்கடிகளால் வளர்ச்சி பணிகளை செய்வது தாமதமாகிறது.அடுத்த மாதத்தில் நிதி கிடைத்த உடன் உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார். முடிவில் ஒன்றிய குழு துணைத்தலைவர் வனிதா அருள்ராஜன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் வேளாண் உதவி அலுவலர் இலக்கியா உள்பட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.