மாவட்ட செய்திகள்

மானூர் பெரியகுளம் நிரம்பி மறுகால் பாய்கிறது - விவசாயிகள் மகிழ்ச்சி

மானூர் பெரியகுளம் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

மானூர்,

நெல்லை மாவட்டத்தின் 2-வது பெரியகுளமான மானூர் பெரியகுளம் 1,120 ஏக்கர் பரப்பளவும், 6,250 மீட்டர் சுற்றளவும், 190 மில்லியன் கனஅடி கொள்ளளவும் கொண்டது.

இதன் மூலம் 5 ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த குளம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெருகி மறுகால் பாய்ந்தது. அதன் பின்னர் நிரம்பவில்லை.

இந்த குளத்துக்கு தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே தாயார்தோப்பு கிராமத்தில் அமைந்துள்ள சிற்றாற்றின் தடுப்பணையில் இருந்து மானூர் பெரியகுளம் கால்வாய் மூலம் நீராதாரம் கிடைக்கும். அந்த கால்வாயின் நீளம் 33 கிலோமீட்டராகும்.

இந்தநிலையில் நீராதார கால்வாயில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளாலும், முட்செடிகள் வளர்ந்தும் மானூர் பெரியகுளத்துக்கு நீர்வரத்து தடைபட்டது. மேலும் மழைக்காலத்தில் வரும் வெள்ள நீரானது மானூர் பெரியகுளத்துக்கு முன்பாக அமையப்பெற்ற 19 குளங்கள் நிரம்பிய பின்பே மானூர் பெரியகுளத்தை வந்தடையும். பல சமயங்களில் மானூர் பெரியகுளத்துக்கு தண்ணீர் வந்து சேரும் முன்பே மழைக்காலம் முடிந்து விடுவதும் உண்டு. இதனால் மானூர் பகுதி பெரும்பாலும் வறட்சியை சந்தித்து வந்துள்ளது.

இதனால் பாதிப்படைந்த மானூர் பகுதி விவசாயிகள் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம் முறையிட்டனர். இதையடுத்து கலெக்டரிடன் நேரடி தலையீடு மற்றும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் டீன் சக்திநாதன், நாம் தாமிரபரணி இயக்கம், மானூர் பெரியகுளம் விவசாயிகள் சங்கம், வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் இணைந்து ராட்சத எந்திரங்கள் மூலம் கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்புகள் மற்றும் முட்செடிகளை அகற்றி, மானூர் கால்வாயை சீரமைத்தனர்.

அதன் பயனாக இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக பெய்த மழைநீரானது, சீரமைக்கப்பட்ட மானூர் கால்வாய் மூலம் எவ்வித தடங்கலும் இன்றி மானூர் பெரியகுளம் வந்து சேர்ந்ததுடன், குளம் நிரம்பி நேற்று மறுகால் பாய்ந்தது. மானூர் பெரியகுளம் நிரம்பியதால் கடல் போல் காட்சி அளிக்கிறது.

இதனை அறிந்த மானூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து, நெல்லை மாவட்ட கலெக்டருக்கும், மானூர் பெரியகுளம் பாசன நில விவசாயிகள் நலச்சங்கத்தினருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு