திருப்பூர்,
திருப்பூர் பாரப்பாளையம் பூச்சக்காடு பகுதியில் பாலாமணி(வயது 52) என்பவர் சொந்தமாக எம்.பி.எம். என்ற பனியன் ஏற்றுமதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். தரைத்தளம் மற்றும் 3 மாடிகளுடன் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இந்த பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிகள் நடந்தது. இரவு 12.30 மணிக்கு மேல் ஊழியர்கள் பணியை முடித்து புறப்பட்டனர்.
இந்தநிலையில் நள்ளிரவு 1.30 மணி அளவில் பனியன் நிறுவனத்தின் முதலாவது மாடியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை அங்கிருந்த ஊழியர்கள் கவனித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. தீ மளமளவென பரவியது.
5 தீயணைப்பு வாகனங்கள்
உடனடியாக இதுகுறித்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி சண்முகம் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதல் மாடியில் பற்றிய தீ 2-வது, 3-வது மாடிக்கும் பரவியது. இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு, அவினாசி, பல்லடம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
சம்பவம் பற்றி அறிந்ததும் மாவட்ட தீயணைப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்பு பணியை முடுக்கி விட்டார். 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. 20 லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டன.
பொருட்கள் சேதம்
நேற்று காலை 8 மணி வரை தீயணைப்பு பணி நடந்தது. அதன்பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. 6 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் தையல் எந்திரங்கள், ஆடைகள் தயாரிக்க பயன்படுத்தும் துணிகள், தயாரிக்கப்பட்டு ஏற்றுமதிக்கு தயாரான ஆடைகள் ஆகியவை எரிந்து நாசமானது. சேத மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மின்கசிவு காரணமாக விபத்து நடந்ததாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். சம்பவம் குறித்து திருப்பூர் மத்திய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் விடிய, விடிய தீயணைப்பு பணிகள் நடந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.