திண்டுக்கல்:
பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பரிசு தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைபருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, துணிப்பை ஆகியவை இடம்பெறுகின்றன.
அதோடு ஒரு முழுநீள கரும்பும் வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து அரிசி ரேஷன்கார்டுதாரர்கள், மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 1,035 ரேஷன்கடைகள் மூலம் மொத்தம் 6 லட்சத்து 64 ஆயிரத்து 970 அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதற்காக பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெற்றுள்ள பொருட்கள் திண்டுக்கல் மாவட்டத்துக்கு வரத் தொடங்கி உள்ளன. இதையடுத்து அவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கிகளில் இருந்து ரேஷன்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் ஒட்டன்சத்திரம் கிட்டங்கியில் இருந்து ரேஷன்கடைகளுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் அனுப்பும் பணியை நேற்று உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வு செய்தார். அப்போது பொருட்களின் தரம் மற்றும் எடையளவு ஆகியவற்றை சோதனையிட்டார்.
மேலும் ரேஷன்கடைகளுக்கு பொருட்களை விரைவாக அனுப்பி வைக்கும்படி உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது கலெக்டர் விசாகன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், வேலுச்சாமி எம்.பி., ஒட்டன்சத்திரம் தாசில்தார் முத்துசாமி, பழனி ஆர்.டி.ஓ. ஆனந்தி, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பொன்ராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.