காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் வந்த அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டபோது கோர்ட்டுக்கு சென்று தி.மு.க.வினர்தான் தடை வாங்கினார்கள். பின்னர் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட பயந்து கொண்டு போலி வாக்காளர்கள் என்று புதிய காரணம் கூறினார்கள். எனவே தேர்தலை சந்திக்க தி.மு.க. பயப்படுகிறது. ஆனால் அ.தி.மு.க. எப்போதும் மக்களையும் தேர்தலையும் சந்திக்க தயாராகவே உள்ளது. என்ன செய்தாலும் தி.மு.க.வால் ஆட்சிக்கு வரவே முடியாது. இலவு காத்த கிளியின் கதைதான் அவர்களுடைய கதையும். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜையின் போது ஜெயலலிதாவால் செய்து கொடுக்கப்பட்ட தங்க கவசத்தை குருபூஜைக்கு வழங்க அவர் வழியில் ஆட்சி செய்யும் எங்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது.
கமல்ஹாசன் அடிக்கடி அந்தர்பல்டி அடிக்கக்கூடியவர். எனவே அவரது விமர்சனங்கள் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. அரசியலில் கருத்து கூற அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் அதற்கான பதில் கருத்து நாகரிகமான முறையில் இருக்க வேண்டும். அடுத்தவர் மனது புண்படுமாறு எதிர் கருத்து கூறக்கூடாது. கந்து வட்டியை ஒழிக்க கடந்த 2003-ம் ஆண்டு ஜெயலலிதா சட்டம் இயற்றினார். இதுகுறித்து பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.
தற்போது டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்த வகை காய்ச்சலாக இருந்தாலும் அரசு ஆஸ்பத்திரியை அணுகி சிகிச்சை பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.