மாவட்ட செய்திகள்

மோடி, எடப்பாடி பழனிசாமி அரசுகளுக்கு எதிராக வாக்களித்து தமிழக மக்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க வேண்டும்

மோடி, எடப்பாடி பழனிசாமி அரசுகளுக்கு எதிராக வாக்களித்து தமிழக மக்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுக் கூட்டத்தில் பிருந்தா காரத் பேசினார்.

திருச்சி,

திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் திடலில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேர்தல் பிரசார மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. திருச்சி மேற்கு பகுதி செயலாளர் வெற்றிசெல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதனுடன் சேர்த்து காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே தமிழக மக்கள் மத்தியில் உள்ள மோடி அரசை வீட்டுக்கு அனுப்பி விட்டு புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கும், தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பதிலாக புதிய அரசு அமைவதற்கும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதை போல் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

2014 நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா மோடியா, லேடியா என சவால் விட்டு பிரசாரம் செய்தார். 37 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. ஆனால் இப்போது அந்த கட்சியின் அமைச்சர்கள் மோடி எங்கள் டாடி என்று பேசுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து ஜெயலலிதாவை மறந்து விட்டார்கள். இவர்கள் டாடி என சொல்லும் மோடி தமிழகத்திற்கு என்ன செய்தார்? தமிழகம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது அவர் மக்களுக்கு ஆறுதல் கூற வரவில்லை. ஆனால் இப்போது தேர்தல் நேரம் என்பதால் 4 முறை வந்து விட்டார்.

கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதி எதனையும் மோடி நிறைவேற்றவில்லை. 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றார். ஆனால் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை பெருகி உள்ளது. பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி.யால் பல சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் நடந்த பேரத்தின் மூலம் மோடி அரசு ஊழலில் திளைத்துக்கொண்டு இருக்கிறது. அதற்கு உறுதுணையாக தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு உள்ளது. ஜாடிக்கு ஏற்ற மூடிபோல் மோடியும், எடப்பாடியும் உள்ளனர்.

காஷ்மீரில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால் சட்டமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்படாததால் அம்மாநில மக்கள் தங்களது உரிமைகளை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அரசியல் சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் பாரதீய ஜனதா அரசை மக்கள் தூக்கி எறியவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் பிருந்தா காரத்திடம் மாநகர் மாவட்டம் சார்பில் ரூ.12 லட்சம், புறநகர் மாவட்டம் சார்பில் ரூ.18 லட்சம், கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் சார்பில் தலா ரூ.1 லட்சம் மற்றும் போக்குவரத்து சம்மேளனம் சார்பில் ரூ.23 ஆயிரம் என மொத்தம் ரூ.32 லட்சத்து 23 ஆயிரம் தேர்தல் நிதி வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் ராஜா, ஜெயசீலன், மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு