விழுப்புரம்,
தமிழகத்தில் கடந்த 28-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிற நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. இந்த பருவமழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வழங்கியுள்ளார்.
மேலும் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகாவிற்கும் துணை ஆட்சியர் தலைமையில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சி, காவல்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மின்சாரத்துறை, மீன்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை போன்ற துறை அலுவலர்களை கொண்டு குழுக்கள் அமைத்து அவர்களின் கீழ் மண்டல அளவிலான குழுக்களையும் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த குழுவினர் அனைத்து குளம், குட்டைகள், வாய்க்கால்கள், ஏரிகள், அணைகள், ஆறுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் ஏதும் இருப்பின் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர பொதுமக்களுக்கு வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி சுகாதாரத்துறையினர் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதாவது நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சாக்கடை கால்வாய்கள் துப்புரவு ஊழியர்கள் மூலம் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விழுப்புரம் நகரில் கோலியனூரான் வாய்க்காலை தூர்வாரும் பணியில் நகராட்சி துப்புரவு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கொசுப்புழு ஒழிப்பு பணியிலும் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.