வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் அருகே உள்ள மெத்தப்பட்டியை சேர்ந்தவர் சின்னமணி (வயது 21). இவர், திருப்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இவர், விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு புறப்பட்டார். இதையடுத்து திருப்பூரில் இருந்து பஸ் மூலம் கோவிலூருக்கு வந்தார். இரவில், மெத்தப்பட்டிக்கு செல்வதற்கு பஸ்வசதி இல்லை.
இதனால் கோவிலூர்-ஆர்.கோம்பை பிரிவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஆர்.கோம்பையை சேர்ந்த பிரேம்குமார் (19), சரவணன் (19), சீனிவாசன் (19) ஆகிய 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை மறித்து சின்னமணி லிப்ட் கேட்டுள்ளார்.
இதையடுத்து 4 பேரும், ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளில் கடைசியாக சின்னமணி அமர்ந்து இருந்தார். மோட்டார் சைக்கிளை பிரேம்குமார் ஓட்டினார்.
கோவிலூர்- ஆர்.கோம்பை சாலையில் ரெட்டியபட்டியை அடுத்து மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள பாலத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சின்னமணியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் பிரேம்குமார், சரவணன், சீனிவாசன் ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்களுக்கு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து எரியோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பானு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். லிப்ட் கேட்டு சென்ற ஓட்டல் ஊழியர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.