கல்பாக்கம்,
கல்பாக்கத்தை அடுத்த அணைக்கட்டு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன்(வயது 55). விவசாய கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார்சைக்கிளில் அருகில் உள்ள பவுஞ்சூர் கிராம வாரச்சந்தைக்கு சென்று காய்கறி உள்ளிட்டவைகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது வழியில் குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மனைவி ரங்கநாயகி (55) மற்றும் தனசு என்பவருடைய மனைவி லட்சுமி (50) ஆகியோரும் அதே சந்தையில் காய்கறி வாங்கிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தனர்.
கன்னியப்பனை கண்ட அவர்கள், பஸ் வசதி இல்லாததால் தங்களையும் மோட்டார்சைக்கிளில் அழைத்துச்செல்லுமாறு கேட்டனர். இதனால் கன்னியப்பன் 2 பெண்களையும் தனது மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கல்பாக்கம் அடுத்த விழுதமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த ஒரு மினி வேன், எதிர்பாராதவிதமாக கன்னியப்பன் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மினிவேன், மோட்டார்சைக்கிள் இரண்டும் அப்பளம்போல் நொறுங்கின. விபத்தில் படுகாயம் அடைந்த கன்னியப்பன், ரங்கநாயகி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
லட்சுமி படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த அணைக்கட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் மற்றும் போலீசார் லட்சுமியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.