மாவட்ட செய்திகள்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் - அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசினார்.

தினத்தந்தி

வேலூர்,

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் -2019 அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்தன. இது தொடர்பாக மாவட்ட அளவில் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான ஆலோசனைக் கூட்டம் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசியதாவது:-

மக்கள் பிரதிநிதிகள் தாங்கள் பயன்படுத்தி வந்த அரசு வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் எரிபொருளை முழுமையாக நிரப்பி ஒப்படைக்க வேண்டும். அரசு கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள், அரசு நலத்திட்டங்கள் தொடர்பான அரசியல் கட்சியினரின் புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பு பலகைகள் ஆகியவற்றை அந்தந்த அரசு அலுவலக நிர்வாகத்தின் மூலமாக உடன் அகற்றப்பட வேண்டும். பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சியின் சுவர் விளம்பரங்கள், விளம்பர பதாகைகள், அரசியல் கட்சியின் சின்னங்கள் ஆகியவற்றை அழிக்க வேண்டும். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலகத்தில் எந்தவொரு ஆய்வு பணிகளை மேற்கொள்ள கூடாது.

வாக்கு பெறுவதற்காக சாதி, இனம், மத உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் எந்த வேண்டுகோளையும் விடுக்கக் கூடாது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல், வாக்காளர்களை மிரட்டுதல், ஆள் மாறாட்டம் செய்தல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஒரு கட்சியினர் பிற கட்சியினர் கூட்டத்தில் இடையூறு செய்ய கூடாது.

ஒரு அரசியல் கட்சி ஒட்டுகிற சுவரொட்டிகளை மற்றொரு அரசியல் கட்சி அகற்றுவது கூடாது. கட்சிக்கூட்டத்தில் தொல்லை கொடுக்கிற நபர்களின் மீது தாங்களே நேரடியாக நடவடிக்கை எடுக்கக் கூடாது. காவல்துறையை நாட வேண்டும். ஊர்வலத்தின்போது போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பிற கட்சிகளை இழிவுபடுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் வாக்களிக்கும் முழு சுதந்திரம் இருப்பதற்கு உறுதி செய்யும் வகையில் தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அனுமதியின்றி விளம்பரங்கள் எழுதுதப்பட்டால் கட்டிட உரிமையாளர்கள் காவல் துறையிடம் புகார் அளிக்கலாம். அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, அவை நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும். பொது இடங்களில் பேனர் வைக்க வழிவகை கிடையாது. மேற்கண்ட விதிமுறைகளை அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் உதவி கலெக்டர்கள் மெகராஜ், பிரியங்கா, இளம்பகவத், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) பெரியசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், தாசில்தார் பாலாஜி, அனைத்து கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது