கிணத்துக்கடவு,
கிணத்துக்கடவு அருகே சிங்கராம்பாளையம் பகுதியில் உள்ள வரசித்தி விநாயகர், வரதராஜ பெருமாள், முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, திருமகள் வழிபாடு, மற்றும் காப்பு அணிவித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தொடர்ந்து முதற்கால வேள்வி, மலர் வழிபாடு, திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு நடந்தது. 2-ந் தேதி மங்கள இசையுடன் 2-ம் கால வேள்வி பூஜை, விமான கலசங்கள் நிறுவுதல் நிகழ்ச்சி நடந்தது.
கும்பாபிஷேகம்
பின்னர் 3-ம் கால வேள்வி, மலர் வழிபாடு, திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு, பிரசாதம் வழங்குதல், எண் வகை மருந்து சாத்தி தெய்வத் திருமேனிகளை பீடத்தில் நிறுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று அதிகாலை 4-ம் கால பூஜை, புனிதநீர் கலசங்கள் கோபுரத்துக்கு புறப்பாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோவில் கோபுரகலசம் மீது சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க புனி நீர் ஊற்றப்பட்டு காலை 6.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அன்னதானம்
தொடர்ந்து விநாயகர், வரதராஜப்பெருமாள், முத்துமாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர் அம்மன் திருக்கல்யாணம் மற்றும் ஊஞ்சல் திருவிழா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழு நிர்வாகிகள் செய்து இருந்தனர்.