மாவட்ட செய்திகள்

ஆழ்வார்திருநகரி அருகே விவசாயி வெட்டிக் கொலை

ஆழ்வார்திருநகரி அருகே விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தலைமறைவான 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

தென்திருப்பேரை,

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை அடுத்த நவலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் பிச்சை மகன் மாரிமுத்து (வயது 35). விவசாயியான இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவில் மாரிமுத்து அப்பகுதியில் உள்ள தன்னுடைய தாயாரின் வீட்டில் சென்று பாத்திரத்தில் குழம்பு வாங்கினார். பின்னர் அவர், தெருவின் வழியாக தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 4 மர்மநபர்கள் திடீரென்று மாரிமுத்துவை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் 4 மர்மநபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில் நடந்த இந்த கொலை சம்பவத்தைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாரிமுத்து பிணமாக கிடந்ததைப் பார்த்து அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ், இன்ஸ்பெக்டர்கள் பட்டாணி (ஆழ்வார்திருநகரி பொறுப்பு), ஞானபிரகாசி (ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர்) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.மாரிமுத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், பழிக்குப்பழியாக மாரிமுத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதன் விவரம் வருமாறு:-

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அப்பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக மாரிமுத்து மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதனால் சில நாட்கள் சிறையில் இருந்த மாரிமுத்து பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் அவரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து உள்ளனர்.

எனவே, ஏற்கனவே நடந்த கொலைக்குப் பழிக்குப்பழியாக மாரிமுத்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாரிமுத்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த தலைமறைவான அருள்ராஜ், ஞானசேகர், சந்திராயன், குணசிங் ஆகிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது