தென்திருப்பேரை,
ஆழ்வார்திருநகரி அருகே திருச்செந்தூர் நெல்லை பாசஞ்சர் ரெயில் என்ஜின் பழுதடைந்தது. பின்னர் அந்த ரெயிலில் மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு சுமார் 1 மணி நேரம் தாமதமாக சென்றதால், பயணிகள் அவதி அடைந்தனர்.
திருச்செந்தூரில் இருந்து நேற்று காலை 7.05 மணிக்கு நெல்லைக்கு பாசஞ்சர் ரெயில் புறப்பட்டு சென்றது. காலை 7.45 மணிக்கு ஆழ்வார்திருநகரி ரெயில் நிலையத்தை கடந்து சிறிது தூரம் சென்றதும், ரெயில் என்ஜின் பழுதடைந்தது. இதனால் காட்டு பகுதியில் நடுவழியில் ரெயில் நின்றது. இதுகுறித்து ரெயில் என்ஜின் டிரைவர், ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாசஞ்சர் ரெயில் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. உடனே அந்த ரெயிலின் என்ஜினை கழட்டி, ஆழ்வார்திருநகரிக்கு கொண்டு சென்று, அதனை திருச்செந்தூர் நெல்லை பாசஞ்சர் ரெயிலில் பொருத்தி, நெல்லைக்கு இயக்கினர். அங்கிருந்து சுமார் 1 மணி நேரம் தாமதமாக காலை 9.20 மணிக்கு நெல்லைக்கு ரெயில் புறப்பட்டு சென்றது.
இதற்கிடையே திருச்செந்தூரில் நிறுத்தப்பட்டு இருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் என்ஜினை கழட்டி, அதனை ஸ்ரீவைகுண்டத்துக்கு கொண்டு சென்று, அங்கு நிறுத்தி இருந்த நெல்லை திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயிலில் பொருத்தி, அதனை திருச்செந்தூருக்கு இயக்கினர். இதனால் அந்த ரெயிலும் சுமார் 1 மணி நேரம் தாமதமாக திருச்செந்தூருக்கு காலை 10.15 மணிக்கு வந்தது.
இதனால் நெல்லை, திருச்செந்தூர் பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடம், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள், தொழிலாளர்கள் பெரிதும் அவதி அடைந்தனர். திருச்செந்தூர் நெல்லை பாசஞ்சர் ரெயில் தாமதமாக சென்றதால், அந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகள் நெல்லை செங்கோட்டை, நாகர்கோவில் கோவை பாசஞ்சர் ரெயில்களை தவற விட்டனர். இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.