அறச்சலூர்,
அறச்சலூர் அருகே பழையகோட்டையில் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் அறச்சலூர் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களை தினமும் பள்ளிக்கூடத்துக்கு அழைத்து வர வாடகைக்கு வேன் அமர்த்தப்பட்டிருந்தது.
இந்த வேன் நேற்று காலை மாணவ-மாணவிகளை அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு சென்று கொண்டிருந்தது. காங்கேயம்-ஈரோடு மெயின்ரோட்டில் உள்ள சில்லாங்காட்டுப்புதூர் என்ற இடத்தில் வேன் சென்றபோது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. உடனே டிரைவர் வேனில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த விபத்தால் வேனில் இருந்த மாணவ-மாணவிகள் அய்யோ, அம்மா என்று சத்தம் போட்டார்கள். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் வேனின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த விபத்தில் மாணவிகள் சங்கீத், சாதனா உள்பட 12 பேர் காயம் அடைந்தார்கள்.
இவர்களை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.