மாவட்ட செய்திகள்

அவினாசி அருகே வேன்கள் மோதியதில் வாலிபர் பலி - 3 பேர் காயம்

அவினாசி அருகே வேன்கள் மோதியதில் வாலிபர் ஒருவர் இறந்தார். 3 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

அவினாசி,

அவினாசி அருகே சுற்றுலா வேன் மீது மற்றொரு வேன் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் இறந்தார். 3 பேர் காயம் அடைந்தனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து சுற்றுலா வேன் ஒன்று நீலகிரி மாவட்டம் ஊட்டி பரளிக்காடு சென்றுவிட்டு மீண்டும் மன்னார்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று இரவு 9 மணி அளவில் திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த வெள்ளியம்பாளையம் அருகே அந்த வேன் வந்து கொண்டிருந்தது. வேனில் 13 பேர் இருந்தனர்.

இந்த நிலையில் நிலக்கோட்டையில் இருந்து மல்லிகைப்பூ பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு வேன் ஊட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. வேனை நிலக்கோட்டையை சேர்ந்த மதன் (வயது 28) என்பவர் ஓட்டிவந்தார். அவருக்கு அருகில் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அழகர் பெருமாள்(22) என்பவர் இருந்தார்.

வெள்ளியம்பாளையம் அரசு பணியாளர் நகர் அருகே ஒரு வளைவில் வந்தபோது எதிர்பாராதவிதமாக மதனின் கட்டுப்பாட்டை இழந்த வேன் நிலை தடுமாறி பக்கவாட்டில் கவிழ்ந்து எதிரே வந்த சுற்றுலா வேன் மீது மோதியது. இதில் அழகர் பெருமாள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து வந்து அவரை மீட்க முயன்றனர். ஆனால் அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டதால் அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் அவினாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து வேனின் கதவை உடைத்து அழகர் பெருமாளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அழகர் பெருமாள் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இந்த விபத்தில் டிரைவர் மதன் மற்றும் சுற்றுலா வேன் டிரைவர் சுசில்குமார்(48) மற்றும் சோமசுந்தரம் (33) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் அவினாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது