சேத்தியாத்தோப்பு,
விக்கிரவாண்டி முதல் கும்பகோணம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடியில் நிலம் கையகப்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.
இதையடுத்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் உள்ள கட்டிடங்கள் அகற்றப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று குமாரக்குடியில், கட்டப்பட்டிருந்த ஜெகன் என்பவருக்கு சொந்தமான திருமண மண்டபம் மற்றும் முருகன் என்பவருக்கு சொந்தமான வீடு ஆகியவற்றை அகற்றுவதற்காக சிறப்பு தாசில்தார் ஹேமா ஆனந்தி, ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் கண்ணன் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் வந்தனர்.
அப்போது அங்கு வந்த முருகனின் மனைவி பார்வதி, எங்களுக்கு வழங்கப்பட் இழப்பீட்டு தொகை போதுமானதாக இல்லை. இது தொடர்பாக நாங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். எனவே எங்களது வீட்டை இடிக்கக்கூடாது என கூறி எதிர்ப்பு தெரிவித்தார். அவரை அதிகாரிகள் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து முருகனுக்கு சொந்தமான வீடு, ஜெகனுக்கு சொந்தமான திருமண மண்டபம் ஆகியவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினர்.
இடிக்கப்பட்ட திருமண மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற இருந்தது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு விருந்து தயார் செய்வதற்காக நேற்று ஊழியர்கள் வந்தனர். இந்த நிலையில் திருமண மண்டபம் இடிக்கப்பட்டதால், அவர்கள் திரும்பிச்சென்றனர். இதனால் திருமண வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.