பெங்களூரு,
சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா தாலுகா கஞ்ஜிபுரா கிராமத்தில் ஸ்ரீகஞ்ஜிவரதராஜ சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சங்கராந்திக்கு காட்டில் இருந்து முயலை பிடித்து வந்து சிறப்பு பூஜை செய்து கிராம மக்கள் வழிபடும் வினோதம் நடந்து வருகிறது. அதன்படி, கடந்த வியாழக்கிழமை சங்கராந்தி பண்டிகைக்காக காட்டுக்கு சென்று முயலை பிடிக்க கிராம மக்கள் சென்றிருந்தனர். ஆனால் அன்றைய தினம் மாலை வரை முயலை தேடினார்கள். ஆனால் கிராம மக்கள் கையில் எந்த ஒரு முயலும் சிக்கவில்லை.
இதன் காரணமாக கடந்த வியாழக்கிழமை ஸ்ரீகஞ்ஜிவரதராஜ சுவாமிக்கு எந்த பூஜையும் நடைபெறவில்லை. பின்னர் நேற்று முன்தினம் மீண்டும் முயலை பிடித்து வருவதற்காக கிராம மக்கள் காட்டுக்கு சென்றனர். கிராம மக்களின் நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பின்பு நேற்று முன்தினம் மாலையில் ஒரு முயல் சிக்கியது. உடனே அந்த முயலை கோவிலுக்கு பிடித்து வந்தனர். அதன்பிறகு, கோவிலில் ஸ்ரீகஞ்ஜிவரதராஜ சுவாமிக்கும், முயலுக்கும் சிறப்பு பூஜை செய்து கிராம மக்கள் வழிபட்டனர்.
அதன்பிறகு, முயலின் காதில் தங்கத்திலான கம்மலை குத்தி, கிராமம் முழுவதும் முயலை ஊர்வலமாக அழைத்து சென்றனர். பின்னர் அந்த முயல் மீண்டும் காட்டில் விடப்பட்டது. இந்த வினோத சம்பவத்தை காண்பதற்காக கஞ்ஜிபுரா கிராமத்திற்கு, பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் வந்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் சங்கராந்திக்கு காட்டில் இருந்து முயலை பிடித்து வந்து ஸ்ரீகஞ்ஜிவரதராஜ சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டால், சாமியின் ஆக்ரோஷம் குறைவாக இருக்கும், கிராமத்திற்கு நன்மை கிடைக்கும் என்பது அந்த கிராம மக்களின் நம்பிக்கை ஆகும். அதன் காரணமாக தான் காட்டில் இருந்து முயலை பிடித்து வந்து சிறப்பு பூஜை செய்து மக்கள் வழிபடுவதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு முயலை காட்டில் இருந்து பிடித்து வந்து தான் பூஜை செய்ய வேண்டும். ஏற்கனவே பூஜை செய்த முயலுக்கு மீண்டும் பூஜை செய்ய கூடாது. இதற்காக தான் அடையாளம் தெரியவதற்காக முயலின் காதில் கம்மலை குத்திவிடுவதாகவும், அடுத்த ஆண்டு காட்டுக்கு செல்லும் போது காதில் கம்மல் இருக்கும் முயல் மீண்டும் சிக்கினால், அதனை விட்டுவிட்டு வேறு முயலை பிடித்து வந்து பூஜை செய்வதாகவும் கிராம மக்கள் கூறியுள்ளனர்.