மாவட்ட செய்திகள்

தர்மபுரி அருகே, அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி பலி - காப்பாற்ற சென்ற பால் வியாபாரியும் பரிதாப சாவு

தர்மபுரி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி பலியானார். அவரை காப்பாற்ற சென்ற பால் வியாபாரியும் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினத்தந்தி

தர்மபுரி,

தர்மபுரி அருகே உள்ள வெண்ணாம்பட்டியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது45). பால் வியாபாரி. இவருடைய வீட்டின் அருகே வசிப்பவர் பழனி(50). விவசாயியான இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே ஒரு புதிய வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள சந்து வழியாக மாட்டு சாணத்தை எடுத்து வருவதற்காக பழனி சென்று உள்ளார்.

அந்த பகுதியில் புதிதாக கட்டப்படும் வீட்டையொட்டி சென்றபோது அறுந்து கிடந்த மின் கம்பியை பழனி மிதித்து உள்ளார். இதில் மின்சாரம் தாக்கி அவர் சுருண்டு விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தேவராஜ், அவரை காப்பாற்றும் நோக்கத்துடன் அந்த பகுதிக்கு சென்று பழனியை தூக்கி உள்ளார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் 2 பேரும் மயங்கி விழுந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தேவராஜ், பழனி ஆகிய 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இறந்த 2 பேரின் உடல்களையும் பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது உருக்கமாக இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் தர்மபுரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது