மாவட்ட செய்திகள்

ஓசூர் அருகே பரோட்டா மாஸ்டர் கொலையில் மனைவியின் கள்ளக்காதலன் கைது

ஓசூர் அருகே பரோட்டா மாஸ்டர் கொலையில் மனைவியின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

ஓசூர்,

கிருஷ்ணகிரி அருகே உள்ள நாரலப்பள்ளியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 35). இவர் பெங்களூரு அருகே உள்ள பெல்லந்தூரில் உள்ள ஒரு கடையில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பாக்கியலட்சுமி (25). இவர் தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூர் அருகே பாகலூர்-சர்ஜாபுரம் ரோட்டில் உள்ள ஒரு தோப்பில் சுப்பிரமணி எரித்து கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார்.

இந்த கொலை குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் பரபரப்பு தகவல் வெளியானது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- சுப்பிரமணி வேலை பார்த்து வந்த பெல்லந்தூர் பகுதியில் பானிப்பூரி கடை நடத்தி வருபவர் சரத்குமார்(27). இவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னசக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர்.

சரத்குமாருக்கு திருமணமாகி, மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், சுப்பிரமணி பெல்லந்தூரில் மனைவி பாக்கியலட்சுமியுடன் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். அப்போது, சுப்பிரமணிக்கும், சரத்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனடிப்படையில், சரத்குமார் அடிக்கடி சுப்பிரமணி வீட்டிற்கு வந்து சென்றார்.

அப்போது, அவரது மனைவி பாக்கியலட்சுமிக்கும், சரத்குமாருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சுப்பிரமணி, மனைவியை கண்டித்துள்ளார். மேலும் மனைவியை நாரலப்பள்ளிக்கு அழைத்து சென்று விட்டார். இருப்பினும், பாக்கியலட்சுமியும், சரத்குமாரும் போன் மூலம் அடிக்கடி பேசி வந்தனர். அத்துடன், தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள சுப்பிரமணியை தீர்த்துக்கட்ட இருவரும் முடிவு செய்தனர்.

அதன்படி சரத்குமார், சுப்பிரமணிக்கு போன் செய்து, புதிய வியாபாரம் செய்வது தொடர்பாக பேசலாம் வா, என்று அவரை வரவழைத்துள்ளார். பின்னர் அவரை மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பாகலூர்-சர்ஜாபுரம் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் சரத்குமார் பெட்ரோல் வாங்கிக்கொண்டார்.

இதையடுத்து அதே பகுதியில் உள்ள மதுக்கடையில் மது வாங்கிக்கொண்டு, அருகிலுள்ள மாந்தோப்புக்கு சுப்பிரமணியை அழைத்து சென்றார். அங்கு இருவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். சுப்பிரமணிக்கு போதை தலைக்கேறியவுடன் அவரை சரத்குமார் கீழே தள்ளி அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டார். இதில், சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி இறந்தார். பின்னர், அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு சரத்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்தநிலையில் சர்ஜாபுரம் பகுதியில் தலைமறைவாக இருந்த சரத்குமாரை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பின்னர் சரத்குமார் சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு