ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கொத்தகொண்டபள்ளி ஊராட்சியில் பிக்கிலிகான் ஏரி மற்றும் பூனப்பள்ளி ஊராட்சியில் பட்டலங்க ஏரி உள்ளது. இந்த ஏரிகளை தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி மழை நீர் சேமிக்கும் வகையிலும், குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையிலும் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிக்கிலிகான் ஏரி மற்றும் பட்டலங்க ஆகிய ஏரியையும் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த 2 ஏரிகளில் கரைகளை பலப்படுத்தி ஏரியை ஆழப்படுத்தி சமன் படுத்தும் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். அதேபோல், அனைத்து ஊராட்சிகளில் உள்ள நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் ஏரிகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
தொடர்ந்து, பூனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட மத்திகிரி கால்நடைப்பண்ணை வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டம் சார்பில் ரூ, 8 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் 3,000 அசோகா, புங்கன், வேம்பு மற்றும் பூவரசன் ஆகிய மரக்கன்றுகளை நடும் பணிகளை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் உதவி கலெக்டர் குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆப்தா பேகம், வி.பாலாஜி, டி.வி.எஸ்.மோட்டார் நிறுவன கள இயக்குனர் தியாகராஜன், பொறியாளர் தமிழரசன், சமுதாய மேம்பாட்டு அலுவலர்கள் சுரேஷ், பரத், பணி மேற்பார்வை பொறியாளர் இம்தியாஸ் கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.